September 16, 2019

Toronto Star இல் குற்றங்களை அறிக்கையிடுவதற்குப் பயிற்சிபெறும் ஒருவராக வேலைசெய்தபோது இந்தக் கதையை ஆரம்பத்தில் எழுதியிருந்த, CBC புலன்விசாரணை podcast (மின்னியல் ஒலிப்பதிவு) Uncover நிகழ்ச்சித் தயாரிப்பாளர் Michelle Shephard, ரொறன்ரோப் பதின்மவயதினர் ஒருவரின் தீர்க்கப்படாத கொலையைப் பற்றி இரண்டு தசாப்தங்களின் பின்னர் மீளவும் சமீபத்திய நிகழ்சியில் ஆராய்கிறார்.

  • CBC.ca/uncover இல் அல்லது Apple Podcastகளில் அல்லது Google Podcastகளில் அந்தப் podcastஐக் கேட்பதுடன் அதற்குச் சந்தாக்காரர் ஆகுங்கள்.

சர்மினி ஆனந்தவேல், அவருடைய 9ம் வகுப்பு நிறைவுவிழாவுக்கு அணியவிருந்த இலேசான ஊதாநிறச் சட்டைக்குப் பொருந்தக்கூடிய காலணிகளை வாங்குவதற்கு விரும்பியிருந்தார்.

இரண்டாம்தரப் பாடசாலையை விட்டுவிலகுவதற்கு ஒரு சில வாரங்களே மீதியிருந்த அந்த நேரத்தில், தனது குடும்பத்தினரிடம் புது வேலை ஒன்றுக்குச் செல்வதாகக்கூறிய அந்த 15 வயது மாணவி, ரொறன்ரோ வடக்கில் இருந்த அவரது தொடர்மாடிக் குடியிருப்பை விட்டுக் கடைசியாக ஜூன் 1999 இல், வெளியேறியிருந்தார்.

நான்கு மாதங்களின் பின்னர், Don River க்கு அருகே, மரங்களடர்ந்த பகுதியொன்றில் இருந்த ஆழமற்ற புதைகுழி ஒன்றில் அவரது எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

அவரது இறப்பு நிகழ்ந்து இருபது வருடங்களின் பின்னரும் எவரும் குற்றம்சாட்டப்படவில்லை.

ஆனால், அவர் காணாமல் போன அதே இரவு முதல், அவர் தான் கொலையாளியாக இருப்பாரென குறித்த ஒருவரைக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்: ஆனந்தவேலின் குடியிருப்புக்கு நேரே கீழுள்ள மாடியில் வசித்த 23 வயதான ஓர் அயலவர்.

காவல்துறையினர் அவரை விசாரணைசெய்தனர், அவரின் கார் மற்றும் குடியிருப்பில் தேடுதல்களை நடத்தினர், அவரை நாள் முழுவதும் கண்காணித்தனர், அத்துடன் அவரை அறிந்தவர்களைப் பேட்டி கண்டனர்.

இன்று அவர் சிறையில் இருக்கிறார் – ஆனால் சர்மினியின் கொலைக்காக அல்ல.

II.

ரொறன்ரோ டொன்மில்ஸ் பகுதியிலுள்ள ஒரு தொடர்மாடிக் கட்டிடத்தில் அவரது பெற்றோர்களுடனும் இரண்டு சகோதரர்களுடனும் சர்மினி வசித்தார் — ஒருவர் மூத்தவர், மற்றவர் இளையவர்.

இரண்டாம் உலகப் போரின் பின்னர், கூட்டமான பங்களா வகை வீடுகள், கவனமாகப் பராமரிக்கப்பட்ட புல்வெளிகள் மற்றும் சாதாரண கார்களைக் கொண்ட வெள்ளை இன நடுத்தர வருமானமுள்ள மக்கள் வாழும் பகுதியாக டொன் மில்ஸ் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது,

ஆனால், காலப்போக்கில், பன்முகத்தன்மைக்குப் பெயர்பெற்ற நகரின் முனைப்பான ஒரு பகுதியாக — ரொறன்ரோவின் பல்வேறு வகையான மக்கள் வாழும் அயல்களில் ஒன்றாக இது மாற்றமடைந்தது. 1990களின் இறுதிப் பகுதிகளில் வேறுபட்ட கலாசாரங்கள் மற்றும் வருமானங்களின் ஒரு கலப்பாக இந்தப் பகுதி இருந்தது.

ரொறன்ரோவுக்கு ஊடாக வளைந்து வளைந்து செல்லும் மரங்களடர்ந்த பகுதிகளால் இந்தப் பகுதி எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மையத்தில் Peanut Plaza உள்ளது, வரிசையாக இருக்கும் பல கடைகளைக் கொண்ட இந்தக் கடைத்தொகுதி அமைந்திருக்கும் நிலம் நிலக்கடலையின் வடிவத்தை ஒத்திருப்பதால் அந்தக் கடைத் தொகுதிக்கு இந்தப் பெயரிடப்பட்டுள்ளது.

அந்தச் சமூகத்திலிருந்த ஏனைய புலம்பெயர் குடும்பங்களைப் போல, ஆனந்தவேல் குடும்பமும் அவர்களின் சொந்த நாட்டுப் போரிலிருந்து தப்பியோடிவந்திருந்தது. ஸ்ரீலங்காவிலிருந்து ஐந்து வருடங்களுக்கு முன் வந்திருந்த அவர்கள் Peanut Plazaஇன் மேற்குப் பகுதியிலுள்ள உயர்மாடிக் கட்டிடத்தில் குடியேறியிருந்தனர்.

சர்மினி அவரின் தம்பி கேதீஸ் உடன் இருக்கிறார்
சர்மினி அவரின் தம்பி கேதீஸ் உடன் இருக்கிறார்

சர்மினி, அவரது தொடர்மாடிக் குடியிருப்பின் முன்பாக, 7ம், 8ம், 9ம் வகுப்பு மாணவர்களைக் கொண்டிருந்த ஒரு மண்ணிறச் செங்கல் கட்டிடமான Woodbine Junior High Schoolஇல் கல்விகற்றார். அவரும் அவரின் சினேகிதர்களும் அடிக்கடி Peanut Plazaஇன் வடக்குப் பக்க முடிவில் மதிய உணவைச் சாப்பிடுவதும், அதன் தெற்குப் பக்கமாக உள்ள Fairview Mallஇல் பொருள்கள் வாங்குவதும் வழக்கம்.

மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளும் பெரியதொரு புன்னகையைக் கொண்ட, இனிமையான, புத்திசாலியான ஒரு பதின்மவயதுப் பெண்ணென சினேகிதர்களும் ஆசிரியர்களும் சர்மினியை நினைவுவைத்திருக்கிறார்கள். அவருக்கென சொந்த அபிப்பிராயங்கள் இருந்தன, எனினும் மற்றவர்களுடன் அவர் மரியாதையாகப் பழகினார்.

"மிகவும் கலகலப்பான, புத்திசாலித்தனமான, அன்பான நபராக சர்மினி இருந்ததால் அவர் வித்தியாசமான ஒருவராகத் தெரிந்தார். அவர் பூரணமானவர் அல்ல, — அவர் ஒரு பதின்மவயதினர் தானே. அத்துடன் அவர் வாய்காட்டவும் செய்தார், இருந்தாலும் நல்ல விதத்தில்தான். அவர் தனக்கு விருப்பமில்லாத எதையும் மற்றவர்களுக்காகச் செய்யக்கூடியவரல்ல," என்று சர்மினியின் 9ம் வகுப்பு ஆசிரியர் Jody White CBC யின் Uncoverக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

Homeroomஇல் சர்மினிக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த Colin Braddock, அவர்தான் தனது "முதலாவது ஈர்ப்பு (first crush)" எனக் கூறுகிறார்.

"அவர் ... மிகவும் கனிவானவர். அறையை ஒளிரச் செய்யக்கூடிய ஒரு புன்னகை அவரிடம் இருந்தது. உண்மையிலேயே சர்மினியிடம் இருந்தது. அத்துடன் அவருடைய ஆளுமையும்தான், எவருடனும் சர்மினி ஒருபோதும் குரூரமாக நடந்ததில்லை," என்று அவர் கூறினார்.

சர்மினி, இடது புறம், இரண்டு நண்பர்களுடன் பாடசாலை yearbook இல் இருக்கிறார். (CBC)
சர்மினி, இடது புறம், இரண்டு நண்பர்களுடன் பாடசாலை yearbook இல் இருக்கிறார். (CBC)

அந்த ஜுன் மாதத்தில், வரவிருந்த அவர்களுடைய 9ம் வகுப்பு நிறைவுவிழா பற்றியும் – அந்தக் கொண்டாட்டங்களைப் பூர்த்திசெய்யும் நடனம் பற்றியும் அந்த 9ம் வகுப்பினர் அனைவரும் மிகவும் பரபரப்பாக இருந்தார்கள், அந்த இலையுதிர் காலத்தில் அவர்கள் எல்லோரும் உயர் பாடசாலைக்குச் செல்லவிருந்தனர்,

பாடசாலை ஆண்டு முடிவின்போது வேலைதேடுவதில் சர்மினி ஆர்வமாக இருந்ததை Braddock நினைவுகொள்கிறார். அவருடைய கைச்செலவுக்காகப் பணத்தைச் சம்பாதிப்பதற்கு சர்மினி விரும்பியிருந்தார்.

அவருக்குக் கிடைத்திருந்த புதிய வேலையைப் பற்றி அவர் காணாமல் போவதற்கு முதல் வெள்ளிக்கிழமை அவருடன் சர்மினி கதைத்தது பற்றி Braddock நினைத்துப் பார்க்கிறார். சர்மினி மிகவும் உற்சாகமாக இருந்தார். வகுப்பு முடிந்துபோகும் போது சர்மினியை அவர் வாழ்த்தினார்.

"அந்த நேரம் யாருக்கும் எந்த வேலையும் கிடைக்கவில்லை" என Braddock கூறினார். "எனக்கு ஆச்சரியமாக இருந்தது, ஏனென்றால், நான் என்ன சொல்கிறேன் என்றால், உதாரணமாக வீடுகளுக்குப் பேப்பர் போடுவதுதான் ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய ஒரு வேலையாக இருக்கலாம்."

"அதன் பிறகு, ஆம், சனிக்கிழமை அது நடந்தது."

III.

ஜூன் 12, 1999 அன்று காலை 9 மணிக்கு புதிய வேலை ஒன்றின் முதல் நாள் வேலைக்காக அவரது வீட்டிலிருந்து சர்மினி புறப்பட்டார்.

மின்தூக்கியை (elevator) நோக்கி அவர் நடந்தபோது, உடுப்புத் தோய்ப்பது பற்றி நகைச்சுவையாகக் கதைத்ததை அந்த நேரம் 13 வயதாக இருந்த அவரின் தம்பி கேதீஸ் நினைவுகூருகிறார்.

சர்மினி எங்கு சென்றார் என்பது குறித்து முரண்பட்ட கதைகள் இருந்தன. அந்தக் கட்டிடத்தில் வசித்த அயலவர் ஒருவர் ஏற்பாடு செய்த வேலையின்படி, தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பது அவரது வேலை என்று அவரது பெற்றோர் கூறினர். ஆனால், அவருடைய நண்பர்கள் வேறு விதமாக நினைத்தார்கள்.

Fairview Mallஇல் உள்ள இருக்கை ஒன்றில் அன்று காலை 10:30 மணியளவில் சர்மினி இருந்ததாக ஒரு சாட்சி நினைவுகூர்ந்தார்; இன்னொருவர் Peanut Plazaஇன் வடக்குப் பகுதியில் காலை 11:45 மணியளவில் அவர் தனிய இருப்பதைப் பார்த்திருக்கிறார்.

அவர் வீட்டுக்குத் திரும்பவேயில்லை.

வீட்டில் சர்மினி.
வீட்டில் சர்மினி.

அவர்களுக்கு அவரின் சினேகிதர்கள் சொன்ன கதைகளை வைத்துக்கொண்டு புலனாய்வாளர்கள் அவர்களுக்கென ஓர் அனுமானத்தைக் கொண்டிருந்தனர்: போதைப்பொருள் தடுப்புக்கான காவல்துறை நடவடிக்கைகளுக்காக இரகசியமாக வேலை செய்யப்போவதாக சர்மினி நினைத்திருந்தார். Metro Search Unit எனப்படும் வேலைக்கான பூர்த்திசெய்யப்படாத வேலை விண்ணப்பம் ஒன்றையும், "முற்றிலும் போலி" எனக் காவல்துறையினர் பின்னர் விபரித்த உடை ஒன்றையும் அவரின் படுக்கையறையில் அவர்கள் கண்டெடுத்தனர்.

அந்த விண்ணப்பத்தில் அச்சுப்பிழை இருந்தது, அத்துடன் விசித்திரமான சொற்தொடர்கள் அதில் இருந்தன. விண்ணப்பதாரரின் பெயர், பிறந்த திகதி, முகவரி மற்றும் வயது மட்டுமே அதில் கேட்கப்பட்டிருந்தது; முன்னர் செய்த வேலைகள் பற்றிய வரலாறு, பரிந்துரைப்புகள் அல்லது சமூக காப்புறுதி இலக்கத்தைக் குறிப்பதற்கு இடங்கள் எதுவும் அதில் இருக்கவில்லை."

அவர் கொல்லப்பட்ட அந்தப் parkக்கு அவரைக் கவர்ந்திழுப்பதற்கான தந்திரத்தின் ஒரு பகுதியாக இந்த விண்ணப்பம் இருந்ததென காவல்துறையினர் நம்புகின்றனர் – எனினும் இந்த ஆதாரங்களை வெளிப்படுத்துவதற்கு சர்மினியின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஆறு மாதங்கள்வரை அவர்கள் காத்திருந்தனர்.

தற்போது ஓய்வு பெற்றிருக்கும் Matt Crone 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு காவல்துறை அதிகாரியாகவும், சர்மினியின் வழக்கின் முக்கிய புலனாய்வாளர்களில் ஒருவராகவும் இருந்திருக்கிறார். அந்தப் பதின்மவயதுப் பெண் காணாமல் போனபோது, உள்ளூர் காவல்துறைப் பிரிவினர் உடனடியாகப் படுகொலைகளுக்குப் பொறுப்பான பிரிவைத் தொடர்புகொண்டனர் என்று அவர் கூறினார்.

ஜூன் 12, 1999 இல் காணாமல்போன சர்மினி அடுத்த ஒரு சில வாரங்களில் ஒன்பதாம் வகுப்பைப் பூர்த்திசெய்ய்திருப்பார். (CBC)
ஜூன் 12, 1999 இல் காணாமல்போன சர்மினி அடுத்த ஒரு சில வாரங்களில் ஒன்பதாம் வகுப்பைப் பூர்த்திசெய்ய்திருப்பார். (CBC)

பதின்மவயதில் ஓடிப்போவோரின் சுயவிபரம் சர்மினிக்குப் பொருத்தமானதாக இருக்கவில்லை. அவர் பெற்றோருடன் நெருக்கமாக இருந்தார், பாடசாலையில் நன்றாகப் படித்தார், வகுப்பு நிறைவுவிழாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவர் நிதானமானவராக இருந்தார், மனக்கிளர்ச்சியில் செயற்படுபவராக இருக்கவில்லை

"சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் – முக்கியமாக இளம்வயதுடைய ஒருவரின் விடயத்தைக் கையாளும்போது — பெற்றோருடன் பேசும்போது, அவர்கள் ஒருவகையான நபரை விபரிப்பார்கள். ஆசிரியர்களுடன் பேசும்போது, அவர்கள் ஒருவகையான நபரை விபரிப்பார்கள். நண்பர்களிடம் பேசும்போது, அவர்கள் ஒருவகையான நபரை விபரிப்பார்கள். அவர்களின் அந்த மூன்று வகையான நபர்களும் வேறுபட்ட விதத்தில் இருப்பார்கள்," என்ற Crone, "ஆனால் இது விசித்திரமானது: எல்லோருமே அவரைப் [சர்மினி] பற்றி ஒரேமாதிரியே சொன்னார்கள். அவர் ஒரு நல்ல பிள்ளை — கடின உழைப்பாளி, வேடிக்கை நிறைந்தவர், புத்திசாலி, நகைச்சுவைமிக்கவர், வாழ்க்கையை அனுபவிப்பவர்."

சர்மினி காணாமல்போனபோது, ஹெலிஹொப்டர்கள், கடைத்தொகுதிகளில் தன்னார்வலர்களின் பிரச்சாரத்துடன் காவல்துறை அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்ட பெரியதொரு தேடுதல் வேட்டை உடனடியாக நிகழ்ந்தது.

அவர்களுடைய மகள் வீடு திரும்பாத அன்றிரவு, சர்மினியின் பெற்றோர் அவர்களது அயலவரின் வீட்டு வாசலை மிகச் சத்தமாகத் தட்டினார்கள். வேலையைப் பெற்றுக்கொள்வதற்கு அந்த அயலவர் உதவியதாக அவர்களின் மகள் அவர்களுக்குக் கூறியிருந்தார்.

ஒருவரும் பதிலளிக்கவில்லை. இரு வாரங்களுக்கு முன்பே Stanley Tippett அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

IV.

ரொறன்ரோப் பகுதியில் ஒற்றைப் பெற்றோர் குடும்பமொன்றில் வளர்ந்த Stanley Tippett, அவரது தாய் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் அரசாங்கக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

பேச்சு, செவிப்புலன் மற்றும் முக எலும்பு மற்றும் இழைய வளர்ச்சியைப் பாதிக்கும், அனேகமான நேரங்களில் அங்க விகாரங்களை ஏற்படுத்தும் ஒரு மரபணுக் கோளாறான Treacher Collins நோய்க்குறியுடன் Tippett பிறந்தார். Tippettஇன் காதுகள் வழமையான அளவைவிடச் சிறியவை, ஒரு காது மற்றதை விடக் கீழே இருக்கும், அவரது கண்கள் சாதுவாக உட்குழிந்த முக அமைப்பில் சாய்வாக இருந்தன.

இதனால், Tippett கேட்டல்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட வகுப்புகளில் இருந்தார், அத்துடன் வளரும்போது சகமாணவர்கள் மற்றும் அயலிலுள்ள பிள்ளைகளின் அடாவடித்தனத்துக்கு உள்ளானார். அவ்வப்போது அவர் தாக்கப்பட்டதாக அவரது தாயார் கூறுகிறார்; ஒன்றுக்கு மேற்பட்ட முறை, காவல்துறையினரைத் தாயார் அதில் ஈடுபடுத்த வேண்டியிருந்தது

அவரது 20களின் முற்பகுதியில், Tippett ஆனந்தவேல் குடும்பத்தினர் வாழ்ந்த அதே தொடர்மாடிக் கட்டிட வளாகத்தில், அவர்களுக்கு ஒரு மாடி கீழே அவரது மனைவி மற்றும் சிறிய பிள்ளையுடன் வசித்துவந்தார். அந்தக் கட்டிடத்தில் உள்ள பல பிள்ளைகளுடன் தனக்கு உறவு இருப்பதாக, 1999 Toronto Star பதிவில் Tippett கூறியுள்ளார்; சிலவேளைகளில் அருகிலுள்ள நீச்சல்தடாகத்தில் நீந்துவதற்காக அவர்களை அவர் கூட்டிச்செல்வார், அத்துடன் அவர்களில் சிலருக்கு அவர் ஜூடோ (judo) கற்பித்தார்.

இந்தப் பிள்ளைகளில் சிலரிடம், அவரது முக விகாரங்கள் காவல்துறையினரின் வெடிகுண்டுப் பிரிவில் பணிபுரியும்போது ஏற்பட்ட ஒரு விபத்தின் விளைவாக ஏற்பட்டது என்று Tippett கூறியிருக்கிறார் என Crone கூறினார்.

ஒன்ராறியோவின் ஆன Gravenhurst இன் மையப்பகுதியில் அமைந்திருக்கும், குறைந்தபட்ச மற்றும் நடுத்தர பாதுகாப்பு உள்ள சிறைச்சாலையான Beaver Creek Institution இல் Stanley Tippett தற்போது வைக்கப்பட்டிருக்கிறார். (Evan Aagaard/CBC)
ஒன்ராறியோவின் ஆன Gravenhurst இன் மையப்பகுதியில் அமைந்திருக்கும், குறைந்தபட்ச மற்றும் நடுத்தர பாதுகாப்பு உள்ள சிறைச்சாலையான Beaver Creek Institution இல் Stanley Tippett தற்போது வைக்கப்பட்டிருக்கிறார். (Evan Aagaard/CBC)

சர்மினி காணாமல்போன அன்று, அவர் செய்வதற்காகச் சென்ற வேலையை அவருக்கு எடுத்துக்கொடுத்தது Tippett என சர்மினியின் பெற்றோர் நம்பியதால் காவல்துறையினர் Tippett மீது கவனம்செலுத்தினர். அவர்களின் அந்தக் கவனத்தை மேலும் தூண்டியது என்னவென்றால், Tippett ஒரு காவல்துறை அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்வதாக அறியப்பட்டிருந்தார். அவரிடம் "police" என்ற சொல் பின்பக்கத்தில் குறுக்காகத் தைக்கப்பட்ட ஜக்கற் ஒன்று இருந்தது. சில நேரங்களில் nightstick ஒன்றை வைத்துக்கொண்டு, அவ்வப்போது அவர் அந்தக் கட்டிடத்தில் ரோந்துசெல்வார்.

"இந்தக் கட்டிடத்தில் நாட்டிற்கு புதியகாகக் குடிவந்தவர்கள் நிறையப் பேர் இருந்தனர். அவர் ஒரு காவல்துறை அதிகாரி [அல்லது] ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி எனப் பெற்றோரிடம் அவர் சொன்னபோது, அவர்கள் அதை நம்பினார்கள்," என்று Crone கூறினார். "அதனால் அவர்களது பிள்ளைகளை Stanஉடன் நீந்தச் செல்ல அனுமதிக்கும் அளவுக்கு அவர்கள் பாதுகாப்பை உணர்ந்தார்கள்."

Listen to Episode 1 of Uncover: Sharmini.

1999இல் சர்மினி காணாமல்போன நேரத்தில், Tippettக்குக் காவல்துறையினருடன் ஒரு பிரச்சினை இருந்தது – அடுத்தடுத்த ஆண்டுகளில் அது தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தது.

1998 இல், அயலிலுள்ள ஒரு சிறுவர் குழுவிடம், அவர் ஒரு காவல்துறை அதிகாரி என்று கூறிய Tippett, அந்தக் குறித்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர்களின் மிதிவண்டிகளில் ஒன்றைக் கைப்பற்றியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு மாதத்தின் பின், போலியாக ஒருவரைக் கைது செய்ய Tippett முயற்சித்ததாகக் கட்டிடத்தின் கண்காணிப்பாளர் கூறியதைத் தொடர்ந்து மீண்டும் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.

1991இல், ஒரு ஆசிரியரின் திறப்புகளைத் திருடி வகுப்பறைக்குள் நுழைந்து அந்த ஆசிரியரின் மேசையில் தீ மூட்டியபோது, முதன்முதலில் 16 வயதான Tippett காவல்துறையினரின் கவனத்திற்கு வந்தார்

சுமார் ஒரு வருடம் கழித்து, ரொறன்ரோப் பேருந்தில் இருந்து இறங்கிய ஓர் இளம் பெண்ணைப் பின்தொடர்ந்து தாக்கியதாக Tippett மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னால் இருந்து அவரை அணுகி, அவரது இடுப்பை ஒரு கையால் சுற்றிவளைத்து, அவரது தலையை நோக்கி ஒரு pellet gunஐக் காட்டி, அவரை ஒரு ஒடுங்கிய பாதையில் இழுத்துச்சென்றுப் படுத்துக் கொள்ளுமாறு Tippett வலியுறுத்தியிருக்கிறார் என நீதிமன்றப் பதிவுகள் கூறுகின்றன.

கொள்ளையடிக்க முயற்சி செய்தமைக்கான குற்றம்சுமத்தப்பட்டுப் பின்னர் அவர் தண்டிக்கப்பட்டார்.

உடனடியாக யோசித்து முடிவெடுக்கக்கூடிய அந்தப் பதின்மவயதுச் சிறுமி, அவருக்கு HIV இருப்பதாகவும், அவர் மாதவிடாயில் இருப்பதாகவும் கூறிப் பாதிப்பில்லாமல் தப்பிச்சென்றிருக்கிறார் என நீதிமன்றப் பதிவுகள் கூறுகின்றன.

V.

ஒக்ரோபர் மாதத்தின் ஒரு குளிரான சனிக்கிழமையன்று ஒரு தந்தையும் மகனும் கிழக்கு Don parklandsஇல் நடக்கச் சென்றபோது, மனித எச்சங்களின் மீது இடறினார்கள். அதைத் தொடர்ந்த காவல்துறையினரின் தேடலின்போது, ஒரு மண்டை ஓடு, சில நீண்ட எலும்புகள் மற்றும் ஒரு தாடை எலும்பு ஆகியவை கிடைத்தன, தாடை எலும்பைப் பயன்படுத்திப் பல்மருத்துவரின் பதிவுகளுடன் சரிபார்த்தபோது அது சர்மினியுடையதை ஒத்ததாக இருந்தது.

அதேநாள் மோட்டார் சயிக்கிளில் வெளியே போய்க்கொண்டிருந்த Crone அந்த இடத்துக்கு விரைந்து வந்தார்.

ஆழமற்ற அந்தப் புதைகுழி, Don Riverஇன் பக்கத்தில், நிலத்தில் விழுந்திருந்த மரக் குற்றிக்கு அருகில் அமைந்திருந்தது. மரங்களடர்ந்த அந்தப் பகுதியில் இருந்த காட்டு நாய்கள் (coyotes) அந்த இடத்தைக் கிளறி சர்மினியின் எச்சங்களை மரங்களடர்ந்த பகுதி முழுவதும் பரப்பியிருந்தன. தடயவியல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் அகழ்வாராய்ச்சியில் பின்னர் சில தலைமயிர்களையும் நீல நிறக் கைவிரல் நகங்களையும் எடுத்தனர் — அதே நிற polishதான் சர்மினி வீட்டை விட்டு சென்ற அன்று அணிந்திருந்தார்.

அந்தப் 15 வயதுச் சிறுமி காணாமல்போய் நான்கு மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. கோடைகால வெப்பம், அந்த இடத்தில் காட்டு நாய்களின் (coyotes) குகை ஒன்று அருகாமையில் இருந்தமை, அந்த மரங்களடர்ந்த பகுதியில் ஏற்பட்ட சிறிய வெள்ளம் போன்ற காரணங்களினால் கொலையாளியின் DNA எதையும் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியாமலிருந்தது.

புலன்விசாரணையின்போது, பல தடவைகள் சர்மினி காணாமல்போனதைப் பற்றி Tippettஐக் காவல்துறையினர் விசாரித்தபோதும், ஒருபோதும் அவரில் குற்றம்சாட்டவில்லை.

Uncover உடனான விரிவான பேட்டிகளின்போது முதல் தடவையாக அவரது கருதுகோளை Crone வெளிப்படுத்தினார் — ஆனால் சர்மினிக்கு என்ன நடந்தது என்றோ அவரை Tippett கொன்றதாக ஏன் இன்னும் அவர் நம்புகிறார் என்றோ — நீதிமன்றத்தில் ஒருபோதும் அவர் சாட்சியம் சொல்லவில்லை.

வேலை ஒன்றை எடுத்துத் தருவதாகக்கூறி — முக்கியமாக “குறிப்பிட்ட அளவு ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டிய” வேலை ஒன்றைத் தெரிந்தெடுத்து – அப்படியானால் அவருடைய நண்பர்கள் அல்லது குடும்பத்தவர்களுடன் சர்மினி அது பற்றிக் கதைக்கமாட்டார் எனச் சர்மினியை Tippett. “தயார்ப்படுத்தல்” செய்திருக்கிறார் என்று அவர் நம்புவதாக Crone கூறினார்.

"அதில் ஒரு குறிப்பிடத்தக்க வக்கிரமான புத்துசாதுரியம் இருக்கிறது," என்று அவர் கூறினார்.

Croneஇன் கருத்துப்படி, சர்மினியின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட கிழக்கு Don parklandsஇல் அவரிடம் சில கருவிகளைக் கொடுத்து, போதைப்பொருள் விற்பனையாளர்களைத் தேடும்படி கூறி Tippett அவரை நிறுத்தியிருக்கிறார்.

"அவர்களைக் கண்டதும் உங்களின் radioவில் என்னை அழையுங்கள், எனது குழுவினருடன் சேர்ந்துவந்து போதைப்பொருள் விற்பனையாளர்களை நான் கைது செய்வேன்" இப்படிச் சொல்லியிருக்கலாமென Crone ஊகிக்கிறார்.

Croneஇன் கருதுகோளின்படி, அவரது புல் வெட்டும் வேலைக்கு Tippett போனார், பின்னர் சர்மினியின் இருப்பிடத்திற்கு வந்து, அவரைக் கொன்று அவரது உடலைப் புதைத்தார். அதன் பின்னர், அவரது உடைகள் மற்றும் காரை அவரது மனைவியின் பெற்றோர் வீட்டில் சுத்தம் செய்தார், பின்னர் தனது காரை உள்ளூரில் இருந்த வாகனம் பழுதுபார்க்கும் இடத்துக்கு எடுத்துச் சென்று புதிய எஞ்சின் ஒன்றைப் போட்டார்.

"எனக்கு நிச்சயமாகத் தெரியும் … இந்த நபர் தான் இந்தக் கொலையைச் செய்தார்," என அவர் சொன்னார்.

தற்போது ஓய்வுபெற்றிருக்கும் Matt Crone 30 வருடங்களுக்கு மேலாக ஒரு காவல்துறை அதிகாரியாகவும் சர்மினியின் வழக்கில் முக்கியமான ஒரு புலன்விசாரணையாளராவும் இருந்திருக்கிறார். (Evan Aagaard/CBC)
தற்போது ஓய்வுபெற்றிருக்கும் Matt Crone 30 வருடங்களுக்கு மேலாக ஒரு காவல்துறை அதிகாரியாகவும் சர்மினியின் வழக்கில் முக்கியமான ஒரு புலன்விசாரணையாளராவும் இருந்திருக்கிறார். (Evan Aagaard/CBC)

முதல் விசாரணை முடிந்த கையுடன், சுமார் $ 1,000 செலவில் புதிய எஞ்சின் ஒன்றைப் போட்டிருந்தபோதும் கூட — உதிரிப்பாகங்கள் (junkyard) சேர்க்குமிடம் ஒன்றில் அவரது காரைச் சுமார் $10 க்கு Tippett விற்றதாக Crone கூறினார்.

வாகனம் நசுக்கப்படுவதற்கு முன்னர் அதனைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆனால் காருக்குள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆயினும் அதன் trunk இன் உள்ளுறை (liner) அகற்றப்பட்டிருந்ததைப் புலன்விசாரணையாளர்கள் கவனித்ததாக Crone கூறுகிறார்.

சர்மினியின் படுக்கையறையில் கண்டெடுத்த போலி விண்ணப்பத்தை அவருக்கு Tippett வழங்கியிருந்திருப்பாரெனவும் காவல்துறையினர் நம்பினர் என Crone கூறினார்.

அந்த விண்ணப்பம் வெப்ப உணர்திறனுள்ள காகிதத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. வெப்பத்திற்கு வெளிப்படுத்தப்படும் போது நிறம் மாறும் ஒரு பொருளால் பூச்சுப்பூசப்பட்ட இது, பொதுவாகப் பணப் பதிவேடுகளில் அல்லது debit terminals ரசீதுகளை அச்சிடப் பயன்படுத்தப்படுகிறது.

Listen to Episode 2 of Uncover: Sharmini.

கடந்தகாலங்களில், இந்த வகையான காகிதங்களிலிருந்து கைரேகைகளைப் பெறுவது கடினம். ஆனால் சமீபத்திய காலங்களில், புதிய முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன — இரண்டு தசாப்தங்கள் பழமையான தீர்க்கப்படாத இந்த வழக்கில் இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்

ஆனால், இந்த விண்ணப்பம் – ரொறன்ரோவிலுள்ள தடயவியல் விஞ்ஞான மையத்துக்கு ஆரம்பத்தில் அனுப்பப்பட்டது, உடனடியாக அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை – பின்னர் பொருத்தமற்ற முறையில் இது பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதை Uncoverஇன் புலன்விசாரனை வெளிக்காட்டியுள்ளது

"அவர்கள் இதனை இளம்சூடான இடத்தில் வைத்திருந்தமையால் அது முழுவதும் கறுப்பாக மாறிவிட்டது … எனவே துரதிஷ்டவசமாக ஆதாரங்கள் அனைத்தையும் நாங்கள் இழந்துவிட்டோம்," என்கிறார் Crone.

சர்மினியின் இறப்புக்கு Tippett மீது ஒருபோதும் குற்றம்சாட்டப்படாததால், Croneஇன் இந்தக் கருதுகோள் ஒருபோதும் செவிமடுக்கப்படவுமில்லை நீதிமன்றத்தில் சாட்சியமாக்கப்படவும் இல்லை.

Stanley ஏற்கனவே பொதுமக்களால் கண்டிக்கப்பட்டிருக்கிறார், குற்றவாளி என்று கருதப்படுகிறார், அவரின் தோற்றமும் இதற்கு ஒரு காரணமென Tippettஇன் மைத்துனர்களான, Rick Steiner மற்றும் Haig DeRusha ஆகிய இருவரும் கூறுகின்றனர்.

"சர்மினியின் கொலைக்குப் பின்னர் பல ஆண்டுகளாக அவர் பின்தொடரப்பட்டிருக்கிறார். சர்மினியின் கொலை முற்றிலும் துயரமானது — நிச்சயமாக அது துயரமானது," என்று DeRusha கூறினார், அவர் Tippettஇன் வழக்கறிஞருமாவார்.

"அவர் கொலை செய்யப்பட்டதால் Stanleyக்கு நடந்ததும் பயங்கரமானது, ஏனென்றால்… அவர் எங்கு சென்றாலும் அவர் ஒரு சந்தேக நபராகவே பார்க்கப்படுகிறார்."

"குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருக்கக்கூடிய ஒருவரை விட மோசமாக அவர் ஏற்கனவே நடத்தப்பட்டிருக்கிறார்" என்று Steiner கூறினார்

"குற்றம்செய்தவர் என்று நிரூபிக்கப்படும் வரை, நாங்கள் குற்றமற்றவர் எனக் கருதப்பட வேண்டுமெனில், எனது மதிப்பீட்டின்படி Stanley குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை … சர்மினியின் கொலையில் நிரூபிக்கப்படவில்லை."

சர்மினியின் எச்சங்கள் கண்டெடுக்கக்ப்பட்ட பின்னர், குறுகிய காலத்துக்குள் ஆனந்தவேலின் குடும்பம் ஒட்டாவாவுக்கு இடம்பெயர்ந்தது. (CBC)
சர்மினியின் எச்சங்கள் கண்டெடுக்கக்ப்பட்ட பின்னர், குறுகிய காலத்துக்குள் ஆனந்தவேலின் குடும்பம் ஒட்டாவாவுக்கு இடம்பெயர்ந்தது. (CBC)

VI.

சர்மினியின் இறப்பைத் தொடர்ந்துவந்த காலங்களிலும் காவல்துறையினரின் கவனத்தை Tippett தொடர்ந்து ஈர்த்துக்கொண்டிருந்தார்.

2000ஆம் ஆண்டில், ஒஷாவா, ஒன்ராறியோவில் உள்ள ஒரு மளிகைக் கடையில் ஒரு காசாளரைப் பின்தொடர்ந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது, டொன் மில்ஸ் பகுதியை விட்டு வெளியேறிய பின்னர் அவர் அங்கு இடம்பெயர்ந்திருந்தார். அவருக்குத் தண்டனை வழங்கப்படவில்லை, ஆனால் சூப்பர் மார்க்கெட்டுக்கு வரக்கூடாது வந்தால் அத்துமீறலாக இருக்குமென்ற உத்தரவு ஒன்று வழங்கப்பட்டது, அத்துடன் அந்தப் பெண்ணிடமிருந்து விலகியிருக்கும்படி உத்தரவிடப்பட்டது.

சில ஆண்டுகளுக்குப் பின்னர், Tippett மற்றும் அவரது குடும்பத்தினர் ரொறன்ரோவுக்கு வடக்கே இரண்டு மணிநேர பயண தூரத்தில் உள்ள, Georgian Bayஇன் தெற்கு முனையில் இருக்கும் ஒரு ski நகரமான Collingwood, ஒன்ராறியோவில் வசித்து வந்தனர். இங்குதான் Tippett அவரது அயலவரான பெண் ஒருவருக்குத் தொந்தரவு கொடுத்தமைக்காக தண்டனை பெற்றார்.

அவரின் காதல் சைகைகளுக்கு அந்த 25 வயதுப் பெண் மறுத்தலிப்புக் காட்டியபோதும், அவர் அதைக் கைவிடவில்லை என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. “அந்தப் பெண்ணின் குடியிருப்புக்கு முன்னால் வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் உட்கார்ந்து அவர் பார்த்துக் கொண்டிருப்பார்.” அந்தப் பெண் அவரது இளம் மகனை நடத்தும்விதம் குறித்து Children's Aid Societyக்குப் பொய்யான குற்றச்சாட்டுகளையும் அவர் தெரிவித்திருக்கிறார்.

2005 ஜூன் மாதத்தில் அவர் நன்னடத்தைப் பிணையில் இருந்தார்.

பின்னர் Tippett மற்றும் அவரின் குடும்பத்தினர் Peterborough, ஒன்ராறியோவுக்கு இடம்பெயர்ந்தனர், அங்கு “அவர் சென்ற நாளிலிருந்து” காவல்துறையினரின் கண்காணிப்பில் இருந்ததாக அவர்கள் கூறுகின்றார்கள், Collingwoodஇல் பின்தொடரல் குற்றத்துக்காக நன்னடத்தைக் கண்காணிப்பில் அவர் இருந்ததும் இதற்கு ஒரு காரணமாகும்.

"அவர் ஒரு பிரச்சினையாக இருக்கப் போகிறார் என்ற உணர்வு எங்களிடம் இருந்தது" என ஓய்வுபெற்ற Peterborough காவல்துறை அதிகாரி Dan Smith நினைவுகூர்ந்தார். "அப்படி ஒரு பிரச்சினையாகத்தான் அவர் இருந்தார்."

YMCAஇல், 12 வயதுச் சிறுமி ஒருத்திக்குப் போலி வேலை ஒன்றை வழங்குவதாகச் சொன்னதாக Tippett குற்றம்சாட்டப்பட்டபோது பிரச்சினையின் முதல் குறிப்புக் கிடைத்தது. அவரது தாயிடம் அந்தச் சிறுமி கூறியபோது, அவருடைய தாய் காவல்துறையினரை அழைத்தார். ஆனால், குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை.

சிறிது காலத்துக்குப் பிறகு, இதேபோன்ற ஊடாட்டம் நிகழ்ந்தது, உள்ளூர் Walmartஇல் ஓர் இளம் பெண் வேலைதேடச் சென்றபோது, Tippett அவரை அணுகினார்.

"மீண்டும் நடந்தது, [இந்த முறை] பாதிக்கப்படக்கூடிய புதிய கனேடியர் ஒருவராக அவர் இருந்தார். YMCAஇல் ஒரு வேலையைப் பெற்றுத்தர முடியும் எனக் கூறி எப்படியோ அந்தப் பெண்ணின் முகவரியை அவர் பெற்றிருக்கிறார்," என்று Smith கூறினார். “அந்தப் பெண்ணின் வீட்டில் அவரது பொருள்களை வைக்கத்தொடங்கினார்.”

"Jason" என்று கையெழுத்திட்டு பிறந்தநாள் வாழ்த்து அட்டையை ஒரு தடவை வைத்துவிட்டு வந்தது உட்பட, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு குறைந்தது மூன்று தடவைகள் Tippett சென்றதைப் பதிவுகள் காட்டுகின்றன.

YMCA இல், அந்தப் பெண்ணின் கடமைகள், காவல்துறையினரின் சார்பில் வேலை செய்வதை உள்ளடக்கியிருக்குமெனவும் அந்தப் பெண்ணுக்கு அவர் கூறியிருந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண் Taco Bell இல் மீண்டும் வேலை தேடுவதை Tippett கண்டபோது, ஏற்கனவே தான் அவருக்கு வேலை தருவதாக வாக்குறுதியளித்திருப்பதைக் கூறி, அவரைத் திட்டினார்.

அவர் தன்னுடன் ஒரு விண்ணப்ப படிவத்தையும் அந்தத் துரித உணவு (fast-food) உணவகத்திற்கு கொண்டு வந்திருந்ததை நீதிமன்றப் பதிவுகள் காட்டுகின்றன.

சந்தேகப்பட்ட, அந்தப் பெண் YMCAக்கு நேரடியாகச் சென்றபோது, அங்கு வேலைவாய்ப்பு எதுவும் இல்லை என்றும் Jason என்ற பெயருள்ள பணியாளர் எவரும் அங்கில்லை என்றும் அவருக்குக் கூறப்பட்டது. உடனே காவல்துறையினருக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டது.

"அப்போதுதான் சந்தேகங்கள் விசுவரூபமெடுத்தன," என்று Smith கூறினார். "ஓ கடவுளே, இந்த ஆள் என்ன செய்கிறார்?"

அவரது வீட்டில் தேடுகை மற்றும் அவரது vanஐக் கைப்பற்றல் மூலம் Tippettஐக் கைது செய்வதற்குக் காவல்துறையினர் முயன்றனர். சாரதியின் இருக்கையின் கீழ் duct tape, கயிறு, பிளாஸ்ரிக் தாள்கள், பிளாஸ்டிக் கேபிள்களைக் கட்டப் பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் சுத்தியல், கத்திகளை அவர்கள் கண்டெடுத்தனர் — "அனைத்து வகையான பொருட்களும் உங்களைக் கடத்துவதற்கான அடிப்படைப் பொருள்தொகுதி 101 ஆக இருக்கக்கூடும்" என்று Smith கூறினார். Tippett இன் வீட்டின் அடித்தளத்தில் pellet pistol ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றவியல்ரீதியான தொந்தரவு செய்த குற்றத்தை Tippett ஒப்புக்கொண்டார் அத்துடன் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Tippettக்கு எதிரான மிகக் கடுமையான குற்றச்சாட்டு — அவரை இன்று சிறையில் வைத்திருக்கும் ஒரு குற்றச்சாட்டு — 2008 இல் ஆகஸ்ட் மாதத்தில் சுமத்தப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஆகஸ்ட் 6ம் திகதி அன்று, நடு இரவின் பின்னரான விடியற்காலையில் அவரது vanஇல் Tippett வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, குடித்துப்போட்டு வீதியில் தடுமாறிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை அவர் கண்டார். அவர்களுக்குச் சவாரி கொடுக்க முன்வந்த Tippett, ஒரு சிறுமியை park ஒன்றில் இறக்கிவிட்டார். பின்னர் 12 வயதாக இருந்த மற்றவருடன் வாகனத்தில் சென்றார்.

அந்தச் சிறுமிகளில் ஒருவரை இறக்கிய இடத்திலிருந்து ஒரு மணி நேரப் பயண தூரத்தில் இருந்த, Courtice, ஒன்ராறியோவில் இருந்த பாடசாலை ஒன்றுக்கு வெளியே மற்றச் சிறுமி இடுப்புக்குக் கீழ் நிர்வாணமான நிலையில், “வேண்டாம்!”, “தயவுசெய்து விடு!” என ஒருவர் கத்துவதைக் கேட்ட அயலவர்களின் அழைப்புக்குப் பதிலளித்த காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டார்

காவல்துறையினர் வந்தபோது, பாடசாலையின் பின்புற வாகன நிறுத்துமிடத்தில் இருந்த சிவப்பு நிற vanஐ நோக்கி ஒருவர் நடந்து செல்வதை அவர்கள் கண்டார்கள். நிற்கும்படி கூறிய காவல்துறையினரின் கட்டளைகளை அவர் புறக்கணித்தபடி, வாகனத்தில் வேகமாக ஏறி, கட்டின் (curb) மேல் வாகனத்தை ஏற்றி அதனை ஓட்டிச்சென்றார் .

ஒரு அதிகாரி அவரைத் துரத்திச் சென்றார், ஆனால் அது இறுதியில் நிறுத்தப்பட்டது – அப்படித் துரத்துவது இருட்டில் இருந்த நகரத்தின் குடியிருப்பு வீதிகளில் மிகவும் ஆபத்தானதாக இருந்தது.

இருப்பினும், vanஇன் உரிமத் தகடு மற்றும் ஓட்டுநரின் தோற்றத்தை அந்த அதிகாரி கவனித்துக்கொண்டார். பின்னர் அந்த மனிதனின் தலை மற்றும் முகத்தின் அம்சங்கள் மிகவும் தனித்துவமானவை என்பதைக் கவனித்து, அந்த ஓட்டுநர் Tippett என்று அவர் அடையாளம் காட்டினார்.

ஓஷாவாவில் கைவிடப்பட்டிருந்த அந்த van Tippett இன் பெயரில் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

பயன்படுத்திய இரண்டு ஆணுறைகளை காவல்துறையினர் வாகனத்திற்குள் கண்டெடுத்தனர். அத்துடன் பாதிக்கப்பட்டவரின் உடைகள் பாடசாலைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டன. DNA சேகரிக்கப்பட்டிருந்தாலும்கூட, பாதிக்கப்பட்டவருடையத் தவிர வேறு எவருடனும் பொருத்திப்பார்க்கக்கூடிய அளவுக்குப் போதுமானதாக இருக்கவில்லை.

அப்படியிருந்தும்கூட, 2009 டிசம்பரில், கடத்தல், பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் தலையீடு உள்பட ஏழு வழக்குகள் தொடர்பாக Tippett குற்றவாளியென நிரூபிக்கப்பட்டிருக்கிறார்.

12 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தமைக்காகத் தண்டனை வழங்கப்பட்ட பின்னர், ஒக்ரோபர் 2011இல், ஆபத்தான ஒரு குற்றவாளியென Stanley Tippett அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் குற்றமற்றவர் என்ற நிலையை தொடர்ந்தும் அவர் பேணுகிறார். (Peter Redman/The Canadian Press)
12 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தமைக்காகத் தண்டனை வழங்கப்பட்ட பின்னர், ஒக்ரோபர் 2011இல், ஆபத்தான ஒரு குற்றவாளியென Stanley Tippett அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் குற்றமற்றவர் என்ற நிலையை தொடர்ந்தும் அவர் பேணுகிறார். (Peter Redman/The Canadian Press)

இன்றுவரைக்கும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளாத Tippett, அவரும் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர், அத்துடன் முற்றிலும் பிழையாகத் தண்டிக்கப்பட்டவர் என்று கூறுவதன் மூலம் அவர் குற்றமற்றவர் எனத் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறார்.

அன்றிரவு என்ன நடந்தது என்பது பற்றிய அவரின் கூற்றில், அந்தச் சிறுமியின் வீட்டிற்குச் சவாரி கொடுத்துக் கொண்டிருந்தபோது, வாகனத்திலிருந்து அவரைத் தூக்கி எறிந்துவிட்டு வன்முறையைப் பாவித்து இரண்டு பேர் அந்தக் காரைக் களவாடிச் கொண்டுசென்றதாக Tippett கூறினார்.

அவர் ஒரு பள்ளத்தில் விழுந்ததாகவும், வெளியே ஏற வேண்டியிருந்தது என்றும் Tippett கூறுகிறார். அதன்பின்னர் அவரது மனைவியை அழைப்பதற்காக, சிறிது தூரம் அவர் நடந்து சென்றார், மனைவி ஒழுங்குசெய்திருந்த ஒரு வாடகைவண்டியில் (cab), அருகிலுள்ள அவரின் மாமாவின் இடத்திற்கு கார் களவாடலைப் பற்றிப் புகாரளிப்பதற்காக சென்றார்.

அந்த 12 வயதுச் சிறுமியை அவர் ஒருபோதும் தாக்கவில்லை என்பதை DNA ஆதாரங்கள் நிரூபிக்கின்றன எனக் கூறும் Tippett, Uncover உடனான ஒரு நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டதற்குக் காரணம், 2008 பாலியல் தாக்குதலில் அவருக்குச் சம்பந்தமில்லை என்பதை நிரூபிக்க விரும்பியமையே என்கிறார்.

Tippettஇன் விசாரணையின்போது கிடைத்த ஆதாரங்கள், அந்தச் சிறுமியின் tank top இல் இரண்டு வெவ்வேறு ஆண்களின் சுக்கிலத் தடயங்கள் இருந்ததைக் காட்டுகின்றன, இது அவரது கார் களவாடல் கூற்றை ஆதரிக்கிறது. இந்த ஆண்கள்தான் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக Tippett குற்றம்சாட்டுகிறார்.

ஆனால், கண்டுபிடிக்கப்பட்ட மாதிரிகள் மிகச் சிறியவை — பாலியல் செயல்பாடு ஒன்று சமீபத்தில் நடந்திருந்தால் ஒருவர் பொதுவாகக் காணக்கூடிய அளவைவிட மில்லியன் கணக்கில் குறைவான விந்தணுக்கள்.

"தோய்க்கும்போது இடம்மாற்றப்பட்டதெனக் கூறி அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்கள்." என்றார் Tippett.

Listen to Episode 3 of Uncover: Sharmini.

Tippettஇன் விசாரணையில் சாட்சியமளித்த தடயவியல் நிபுணர் ஒருவர் – தோய்க்கும்போது ஒரு பொருளின் சிறிய அளவு ஒரு உடுப்பிலிருந்து இன்னொன்றுக்கு இடம்மாறலாம் — பாதிக்கப்பட்டவரின் tank topஇல் இரண்டு வகையான விந்துக் கலங்கள் இருந்தமைக்கு இது ஒரு நம்பத்தகுந்த விளக்கமாகும் — எனச் சாட்சி சொன்னார்.

அவரது தீர்ப்பில் Tippettஐக் குற்றம்செய்தவர் எனக் கூறிய நீதிபதி பாதிக்கப்பட்டவரின் உடுப்பில் அந்தச் சிறுமியின் DNA மட்டுமே இருந்ததைக் கவனித்தார்.

Tippett மேன்முறையீடு செய்தார், ஆனால் அதில் தோல்வியடைந்தார். அவரது ஆரம்பத் தீர்ப்பில் விந்தணுக்கள் பற்றிக் குறிப்பிடாமல் விசாரணை நீதிபதி பிழை விட்டிருந்தாலும்கூட, பிழை குறிப்பிடத்தக்கதாக இல்லை என்று அந்தத் தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

உண்மையில், ஆண் DNA எதையும் நிரூபிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். அதை யாருடனும் பொருத்திப்பார்ப்பதற்குப் போதுமான மாதிரி இருக்கவில்லை. எனவே, அது 12 வயது சிறுமியை வேறுயாரோ பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகச் சுட்டிக்காட்டவுமில்லை, Tippettஐக் குற்றவாளியாக்கவுமில்லை. அது எந்த முடிவையும் தரவில்லை.

சாட்சியின் சாட்சியம் உட்பட — மற்றச் சாட்சியங்கள் — Tippettஐத் தண்டிக்க போதுமானவையாக இருந்தன.

மேன்முறையீட்டு நீதிபதி, மேன்முறையீட்டை மறுத்து, Tippettஇன் கார் களவாடல் "நம்பமுடியாததாக" இருக்கிறதென்று தீர்ப்பளித்தார்.

ஒக்ரோபர் 2011இல், Tippett ஒரு ஆபத்தான குற்றவாளியென அறிவிக்கப்பட்டார். அத்துடன் அவரது வாழ்நாள் முழுவதும் அவரைச் சிறையில் வைத்திருக்கக்கூடிய அறுதியற்ற தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.

Tippett பாலியல் வெறி கொண்டவர் என்றும் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டால் மீண்டும் குற்றம்செய்வார் என்றும் குறிப்பிட்ட நீதிபதி Bruce Glass, “அவர் தொடர்ச்சியாக, ஆக்ரோஷமான நடத்தையைக் காட்டியுள்ளார்,” என்று அந்த நேரத்தில் கூறினார்,

2018 இல் கடைசியாக Tippettக்கு நன்னடத்தைப் பிணை (parole) மறுக்கப்பட்டது.

ஆனால் அவர் பிழையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என அவர் நினைக்கும் தீர்ப்புக்கு எதிராக அவர் தொடர்ந்து போராடுகிறார்; DNA பகுப்பாய்வை மறுபரிசீலனை செய்யும்படி, நீதிக்குப் புறம்பானது என்று தீர்மானிக்கப்பட்ட எதையும் விசாரிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஒன்ராறியோவின் நீதியமைச்சரை அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

"வாழ்க்கையைச் சீரமைக்கச் சிலரினால் முடியுமென நான் நினைக்கிறேன், அதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள்," எனக் கூறிய Peterborough முன்னாள் காவல்துறை அதிகாரி Smith,"ஆனால், மக்களை ஆபத்துக்குள்ளாக்காமல் அந்த மனிதனால் மீண்டும் ஒருபோதும் சமூகத்தில் வாழமுடியாது என 100 சதவீதம் நான் முழுமையாக நம்புகிறேன்" என்றார்.

"அவரைப் போன்ற ஒரு மனிதரை நான் ஒருபோதும் சந்தித்ததில்லை — பாரதூரமான பல குற்றவாளிகளை நான் கையாண்டிருக்கிறேன் — Stanley Tippett போன்ற ஒருவரை நான் ஒருபோதும் சந்தித்ததில்லை."

VII.

ஒன்ராறியோவின் cottage country ஆன Gravenhurst இன் மையப்பகுதியில் அமைந்திருக்கும், குறைந்தபட்ச மற்றும் நடுத்தர பாதுகாப்பு உள்ள சிறைச்சாலையான Beaver Creek Institution இல் Tippett தற்போது வைக்கப்பட்டிருக்கிறார். பல வன்முறைச் சம்பவங்களின் பின்னர், Peterboroughக்கு அண்மையிலிருந்த Warkworth Institutionஇலிருந்து அவர் அங்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருடைய தோற்றமும் சிறைச்சாலைகளில் பொதுவாக இருக்கும் தரநிலைகளும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது Tippett குறிவைக்கப்பட்டிருப்பதற்கான காரணங்களாக இருக்கலாம்: பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் மிகவும் வெறுக்கப்படுகிறார்கள்.

பேட்டியை ஆரம்பிப்பதற்கு முன்பாக, சர்மினியைப் பற்றி அவர் பேசமாட்டார் என்றார், Tippett; அவர் சர்மினியைப் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை, அதற்கு பதிலாக அதை “டொன் மில்ஸ் சம்பவம்” என அழைத்தார். 12 வயதுச் சிறுமியைத் தாக்கியதாக அவர் பிழையாகத் தண்டிக்கப்பட்டிருப்பது பற்றி மட்டுமே அவர் பேச விரும்புவதாக அவர் கூறினார்.

அவரது அனைத்துத் தீர்ப்புகள் தொடர்பாகவும், அந்த நிகழ்வுகள் பற்றிய அவரின் கதையை Tippett வைத்திருக்கிறார்.

அவரது அனைத்துத் தீர்ப்புகள் தொடர்பாகவும், அந்த நிகழ்வுகள் பற்றிய அவரின் கதையை Tippett வைத்திருக்கிறார். (CBC)
அவரது அனைத்துத் தீர்ப்புகள் தொடர்பாகவும், அந்த நிகழ்வுகள் பற்றிய அவரின் கதையை Tippett வைத்திருக்கிறார். (CBC)

Collingwood வழக்குத் தொடர்பாக, அவரது அயலவரான பெண்தான் உண்மையில் அவரைப் பின்தொடர்ந்ததாகக் குற்றம் சாட்டினார். திருமணமான ஆண்களுடன் அந்தப் பெண்ணுக்கு வெறி இருந்தது, என்றார் அவர்.

"என்னுடைய பிள்ளைகளை நான் படுக்கையில் படுக்க வைத்துக்கொண்டிருந்தபோது, அவர் … அவருக்கு ஒரு பிரச்சினை இருப்பதாகவும், அந்தப் பிரச்சினையை அவரின் தாயிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டதாகவும் என் மனைவிக்குக் கூறினார். திருமணமான ஆண்களுக்குப் பின்னால் அலைவது அவரின் பழக்கம் என்று அவர் கூறினார்," என Tippett கூறினார். “அப்படிச் செய்வதை அவரால் நிறுத்த முடியவில்லை, அதைத்தான் அவரின் தாயும் செய்தார்.”

Peterborough Walmart அவர் சந்தித்த இளம் பெண்ணின் கதை பற்றி? அதே வேலைக்கு அவர் விண்ணப்பித்திருந்தார் என்றும், அந்தப் பெண்ணுடன் பேசிய பிறகு, அந்தப் பெண் அதற்குத் தகுதியற்றவர் என்பது தெளிவாகத் தெரிந்தது என்றும் Tippett கூறுகிறார்.

வேறொரு பதவியை விட்டு விலகிவிட்டதாக அந்தப் பெண் அவரிடம் கூறியதாகக் கூறும் Tippett வேலைதேடுவதற்கு அவர் சிரமப்பட்டுக் கொண்டிருந்ததால், அது பற்றிக் "கொஞ்சம் பொறாமை" அடைந்திருந்தார் என்கிறார். எனவே அவர் அந்தப் பெண்ணை YMCA நோக்கித் தவறாக வழிநடத்தியிருக்கிறார்.

Taco Bellஇல் அந்தப் பெண்ணை Tippett தற்செயலாகச் சந்தித்தபோது, அவர் கடுமையாக நடந்துகொண்டார், ஏனெனில் அவரது குடும்பத்தவருடன் அந்த உணவகத்திற்கு அவர் அடிக்கடி செல்வதுண்டு; அந்தப் பெண் பணியில் அமர்த்தப்பட்டால், அவரது குடும்பத்தினரை அந்தப் பெண் சந்திக்கலாம் அத்துடன் அவரது பொய்யைப் பற்றி அவர்களிடம் சொல்லக்கூடும் என்று அவர் கவலைப்பட்டார் என அவர் சொன்னார்.

அவரது வாகனத்தில் காணப்படும் பொருட்களைப் பொறுத்தவரை — ஒரு சுத்தியல், கேபிள் கட்டும் பொருள்கள், கயிறு, duct tape — காவல்துறையினர் "அவற்றைப் பெரிதுபடுத்தியிருக்கிறார்கள்," என்று Tippett கூறுகிறார்.

"எனது வாகனத்தைச் சுத்தம் செய்த பொருள்களைச் சும்மா நான் வைத்திருந்தேன்," என்று அவர் கூறினார். "வெவ்வேறு பொருள்களைப் பல்வேறு நோக்கங்களுக்கு ஆட்கள் பயன்படுத்தலாம்."

உதாரணமாக, கேபிள் கட்டும் பொருள்கள் அவரது பிள்ளைகளுக்கான கையடக்கமான தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டன, என்றார் அவர்.

மிகக் கடுமையான குற்றச்சாட்டான, 2008 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாகத் அவர் குற்றமற்றவர் என்ற நிலையை Tippett பேணுகிறார், மேலும், அந்தச் சிறுமிகளுக்குச் சவாரி வழங்கியமைக்காக வருத்தப்படுவதாகக் கூறினார். ஆனால் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளும்படி அவர் மக்களைக் கேட்கிறார்: அது நள்ளிரவுக்குப் பிந்திய நேரமாக இருந்தது, அத்துடன் அந்தச் சிறுமிகள் குடித்துவிட்டு வீதியில் இருந்தனர்.

"உதவி தேவைப்படுகின்ற நிலையில் ஒருவர் இருக்கிறார் என நினைத்து, வாகனத்தை நிறுத்தி அவருக்கு உதவிசெய்ததுதான் எனது பிழை,"

Tippettஇன் மனநலம் பற்றிய குறிப்புகள் — அவர் ஆபத்தான குற்றவாளி என்பதற்கான விசாரணையின்போது அரச தரப்பு மற்றும் வாதிச் சட்டத்தரணிகளுக்காக மனநல மருத்துவர்களால் சேகரிக்கப்பட்டது — "கவனத்தைப் பெறுவதற்காக ஆபத்துக்களை எதிர்கொள்பவர் (sensation seeker)" மற்றும் "ஆளுமை ஒழுங்கீனம்" உள்ள "மனக்கிளர்ச்சிகள் கொண்ட ஒருவர்" என்று அவரை அவை விபரிக்கின்றன. அவர் ""தந்திரமானவர் (duplicitous)" அத்துடன் தனக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுப்பவர் (narcissist) என்று அவை கூறுகின்றன.

VIII.

தற்போது, ஆனந்தவேல் குடும்பம் ஒட்டாவாவில் வசிக்கிறது, சர்மினியின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட குறுகிய காலத்துக்குள் அவர்கள் அங்கு இடம்பெயர்ந்தனர்.

சர்மினியின் சகோதரர்களான கேதீஸ் மற்றும் தினேஷ் இப்போது அவர்களின் 30களில் இருக்கிறார்கள், ஒருவருடன் ஒருவர் நெருக்கமாக இருக்கிறார்கள் — மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள், அவர்களின் மனைவிமாரும் சகோதரர்கள் ஆவார்கள். ஆகாரம் மற்றும் ஏனைய குடும்ப நிகழ்வுகளுக்காகப் பெற்றோரை அவர்கள் அடிக்கடி சந்திக்கிறார்கள்.

கேதீஸின் மகளின் நடுப்பெயர் சர்மினி, அவரது மகள் அவரது தாத்தா, பாட்டி வீட்டில் இருக்கும் படங்களில் உள்ள சிறுமியைப் பற்றிக் கேள்விகள் கேட்க ஆரம்பித்துள்ளார் என்று கேதீஸ் கூறுகிறார்.

"எப்போதுமே எனக்குச் சிரமாக இருந்த விடயங்களில் ஒன்று ... [என்னவெனில்] பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதும், ஒரு காலத்தில் எனக்கு ஒரு சகோதரி இருந்தாரென அவர்களுக்குச் சொல்வதும்," என்று அவர் கூறினார்.

அந்த நேர ஞாபகங்கள் அவர்களுக்குப் பெரிதாக இல்லையென இரண்டு சகோதரர்களும் கூறுகிறார்கள்; அவர்கள் மறந்துவிட்டார்கள் அல்லது அவற்றை அவர்களின் அடிமனதில் புதைத்துவிட்டார்கள். ஆனால், அவர்களின் சகோதரியைக் கொலைசெய்தவர் Tippettதான் என்று நம்புபவர்களில் இவர்களும் இருக்கின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றின் போது சர்மினி, அவரின் சகோதரர்களான கேதீஸ் (வலது பக்கம்), மற்றும் டினேஷ், (நடுவில்) காணப்படுகிறார்.
பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றின் போது சர்மினி, அவரின் சகோதரர்களான கேதீஸ் (வலது பக்கம்), மற்றும் டினேஷ், (நடுவில்) காணப்படுகிறார்.

சர்மினியின் கொலை — 1999 ஆம் ஆண்டின் 36வது படுகொலை என பட்டியலிடப்பட்டுள்ளது — இது ஒரு தீர்க்கப்படாத பழைய வழக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது புலன்விசாரணையைத் தொடர்வதற்கு துப்பு எதுவும் இல்லை.

2011 இல், "புதிய தகவல்கள்” கிடைத்ததைத் தொடர்ந்து அவரது குழு இந்தக் கொலை குறித்த புலன்விசாரணையை மீளவும் செய்ததாக ரொறன்ரோ காவல்துறையினரின் தீர்க்கப்படாத வழக்குகளுக்குப் பொறுப்பாக இருக்கும் Det-Sgt. Stacy Gallant, உறுதிப்படுத்துகிறார்.

"துரதிர்ஷ்டவசமாக, நடந்த இரண்டு விசாரணைகளுக்குமிடையில், எவரையும் கைது செய்யக்கூடிய அல்லது வழக்கைத் தொடரக்கூடிய இடத்திற்கு அவர்களால் அதைக் கொண்டுவர முடியவில்லை," என்று அவர் கூறினார்

என்ன புதிய தகவல் கிடைத்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாதென Gallant மறுத்துவிட்டார். ஆனால். Tippett ஆபத்தான குற்றவாளி என்ற விசாரணையுடன் அந்தக் காலவரிசை ஒத்திருக்கிறது.

முன்னாள் அரச வழக்கறிஞர் Paul Culverஇன் கருத்துப்படி, தீர்க்கப்படாத பழைய ஒரு வழக்குத் தொடர்பாக வழக்காடுவது பொதுவில் மிகவும் சிரமமாகும். சாட்சிகள் இறந்திருக்கலாம் அல்லது புதிய முகவரியை அறிவிக்காமல் அவர்கள் இடம்பெயர்ந்திருக்கலாம், அத்துடன் காலப்போக்கில் ஞாபகங்கள் அழியலாம்; விபரங்கள் மறந்து போகலாம்.

"குற்றத்தை நிரூபிப்பதற்கு ஒரு நியாயமான வாய்ப்பு இருக்கவேண்டும் என்பது குற்றம்சாட்டுவதற்கான ஒரு தேவையாகும். ஒருவரைக் குற்றவாளியாகக் கண்டுபிடிப்பதற்கு, நியாயமான சந்தேகம் எதற்கும் அப்பாற்பட்ட ஆதாரங்கள் இருக்கவேண்டும்,” என்று அவர் கூறினார். "எங்காவது ஒரு கட்டத்தில், குற்றச்சாட்டை முன்வைத்து அதை விசாரணைக்குக் கொண்டுசெல்வதன் பின்விளைவுகள் என்ன என்பதை ஒருவர் எடைபோட வேண்டும்."

சர்மினி ஒரு சிறுமியாக இருந்தபோது
சர்மினி ஒரு சிறுமியாக இருந்தபோது

Queensville, ஒன்ராறியோவைச் சேர்ந்த ஒன்பது வயது Christine Jessopஐ 1984இல் பாலியல் வன்புணர்வு செய்து கொலைசெய்தமைக்காக 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த Guy Paul Morin குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டதும் சர்மினியின் மரணம் சார்பான செயற்பாடுகளைப் பாதித்தது.

சர்மினியைப் போலவே, Jessop இன் உடலும் அவர் காணாமல்போன பல மாதங்களுக்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டது.

பயம்கொள்ளவைக்கும் அயலவராக விபரிக்கப்படும், Morin அந்தச் சிறுமியைத் தேடுவதில் உதவிசெய்யவுமில்லை, அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவும் இல்லை என்பதால் அவர்தான் கொலைகாரராக இருப்பாரென காவல்துறையினர் கருதினர். ஒரு தசாப்த காலத்திற்குப் பின்னர், DNA ஆதாரங்கள் அவரை விடுதலை செய்தன.

அவருக்கு வழங்கப்பட்ட பிழையான தண்டனையைத் தொடர்ந்து நிகழ்ந்த பொதுமக்கள் விசாரணையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரச வழக்கறிஞர்களின் ஒரு வழிப் பாதைக்கு – Morin தான் கொலையாளி என்ற ஒரே முடிவான நம்பிக்கையுடன் கூடிய மனப்பான்மைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Listen to Episode 4 of Uncover: Sharmini.

சர்மினியின் வழக்கின்போதும், அந்த விடயம் அந்த அரசாங்க வழக்கறிஞரின் மனதை ஆக்கிரமிருந்திருந்தாதால், குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது பற்றிய அவரின் அச்ச உணர்வை அது சிலவேளைகளில் ஊக்குவித்திருக்குமோ என அவர் யோசிப்பதாக Crone கூறினார்.

"Christine Jessop வழக்கின் மீள்விசாரணையை விட்டு வெளியேறி இந்த வழக்குக்கு நான் அப்போதுதான் புதிதாக வந்தேன், அதனால் Christine Jessop மற்றும் Guy Paul Morin வழக்கின் அனைத்துத் துக்கரமான விடயங்களும் மறக்கமுடியாதவையாக இருந்தன," என்று Crone கூறினார். "உண்மையைச் சொன்னால், விசாரணையை நாங்கள் ஆரம்பித்தபோது ... 'வேறு ஏதேனும் விளக்கம் இருக்கிறதா?' 'வேறு யாராவது சந்தேக நபர்கள் இருக்கிறார்களா?' 'வேறு ஏதாவது மாற்றுக் கோட்பாட்டை நாங்கள் ஆராய வேண்டுமா?' 'வேறு எதையாவது நாங்கள் ஏதாவது யோசிக்க வேண்டுமா?' என்றெல்லாம் எங்கள் குழுவினரிடம் அடிக்கடி கேட்டோம், இது உங்களுக்கு விளங்கும். 'நீங்கள் என்ன முட்டாளா?' என்பது போல எனக்கு கிடைத்த பதில்கள் கருத்தற்ற வெற்றுப் பார்வைகளாக இருந்தன ... அனைத்துத் துப்புக்களும் Stanஐச் சுட்டிக்காட்டியபோது, ஒருவகையில் அவை திணறடிக்கச்செய்பவையாக இருந்தன."

Tippettஇல் குற்றம்சாட்டுவதற்கு ஆதாரங்கள் நம்பக்கூடியவையாக இருக்க வேண்டும் என்பது அவரது குழுவினருக்குத் தெரியும் என்றும் Crone கூறினார் — ஆனால் அவை அப்படியானவையாக இருக்கவில்லை.

சர்மினியின் வழக்கில் மூன்று பெரிய இடைவெளிகள் இருந்தன: தடயவியல் சான்றுகள் போதாமை; அந்தப் பதின்மவயதுச் சிறுமி காணாமல் போன அன்று, அவர் எங்கே போனார் என்பது பற்றிய முரண்கள்; அன்றைய நாளில் சந்தேக நபர் ஒருவருடன் சேர்த்து அவரை எவரும் பார்த்ததில்லை என்ற உண்மை

"நான் ஓய்வு பெற்றபோது, ஆனந்தவேல் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டேன் — இந்தப் புதிரை நாங்கள் ஒருபோதும் விடுவிக்கவில்லை, அவர்களின் இந்தப் பிரச்சினையை நாங்கள் ஒருபோதும் தீர்த்துவைக்கவில்லை. இதற்கான ஒரு முடிவைக் காண அவர்களுக்கு உரிமையிருக்கிறது என்று நான் நினைக்கிறேன், அது அவர்களுக்குக் கிடைக்கவில்லை, எவரும் அதை அவர்களுக்கு வழங்கவில்லை," என்று Crone கூறினார். "எனவே, Stanley Tippettக்கு என்ன நடக்கிறது என்பதைவிட அந்த வழக்குக்கு ஒரு முடிவு கிடைப்பதுதான் எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக அமையும்."